இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் 11.16 மணியளவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்தப் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
பிரதமராகப் பதவியேற்பதற்காக, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளின் 20 முக்கிய பிரமுகர்களுடன், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி செயலகத்துக்குச் சென்றிருந்தார். எனினும், ஜனாதிபதி வராததால், சிறிது நேரம் காத்திருக்க நேரிட்டது.
முற்பகல் 11.16 மணியளவில் வந்த ஜனாதிபதி ,மைத்திரிபால சிறிசேன, புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் பங்கேற்க ஊடகங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
அதிபர் செயலகத்துக்கு முன்பாக பெருமளவு ஐதேக ஆதரவாளர்கள் திரண்டு நின்று ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பிக் கொண்டிருந்தனர்.