போரின் இறுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக, அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட அணியைச் சேர்ந்த எஸ்.பி.திஸாநாயக்க, வெளியிட்ட கருத்தை இராணுவப் பேச்சாளர் நிராகரித்துள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த எஸ்.பி.திஸாநாயக்க இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலை புலிகள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டு விட்டதாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில், இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலை புலிகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எவரையும் இராணுவத்தினர் கொலை செய்யவில்லை எனவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவின் கருத்தை முழுமையாக நிராகரிப்பதாகவும், இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்தார்.
இறுதி யுத்தக் காலத்தில், எஸ்.பி.திசாநாயக்க, அரசாங்கத்தின் முக்கிய அமைச்சராக இருந்துள்ளார். ஆகவே அவ்வாறான ஒருவர் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் கொலை செய்யப்பட்டு விட்டதாகக் கூறும் கருத்தை, சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியுமா?
என்றும் அவரிடம் வினவியபோது, இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் கொலை செய்யப்பட்டு விட்டதாகக் கூறும் கருத்தானது, அடிப்படை ஆதாரமற்றது என்றும் ஆகவே இவ்வாறான கருத்துகளை, இராணுவம் முழுமையாக நிராகரிக்கிறது என்றும் அவர் கூறினார்.