தமிழ் கவிதைகளுக்குப் புத்துயிர் கொடுத்து, எளிமையாக உருவாக்கி புதிய பாதையை அமைத்தவர் எட்டயபுரத்து முண்டாசு கவிராஜன் பாரதியார்.
எமக்குத் தொழில் கவிதை இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்று அறைகூவல் விடுத்த அவர்,
பிறமொழி இலக்கியம், உலக இலக்கியம், நாட்டு நடப்பு, அரசியல் அறிவு என பரந்த உலகப் பார்வையுடன் நுட்பமான திறன்களையும் பெற்றிருந்தார்.
பாரதியின் குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், பகவத் கீதை உரை போன்றவை அவரது அழியாப் புகழுக்குக் கட்டியம் கூறுகின்றன.
கண்ணனை சிறுகுழந்தையாகவும் நண்பனாகவும், சேவகனாகவும் காதலியாகவும் குருவாகவும் வர்ணித்தவர் பாரதி.
பாரதியின் பல பாடல்கள் இசை ராகத்துடன் இணைந்து எழுதப்பட்டவை என்பதால் திரைப்படப் பாடல்களாக இவை
அவ்வப்போது செவிக்கு இன்பம் தந்து ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.
சுதந்திரப் போராட்டத்தில் பாரதியின் பாடல் வரிகள் புதிய எழுச்சியை ஏற்படுத்தின.
இளைஞர்கள் அந்தப் பாடல்களைக் கேட்டு வீறுகொண்டு எழுந்தனர்.
பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா’ என்று பிரகடனம் செய்த மகாகவி பாரதி, சித்தர்களைப்போல,
ஞானிகளைப்போல, சிந்தித்தது மட்டுமல்லாமல் ‘சிந்துக்குத் தந்தை’ என்ற பாவேந்தரின் கூற்றுக்கிணங்க பாடிப் பாடிப் பரவசப்பட்டவா்
என்பதற்கும், பாட்டாலே பலரையும் பரவசப்படுத்தியவர் என்பதற்கும் ஏராளமான சான்றுகள் உள்ளன.
பாரதியின் பிறந்த நாள் என்பது சம்பிரதாயமான நினைவு கூரல் அல்ல; அது மகத்தான மனிதத்துவத்தின் கொண்டாட்டம்.கவிதையின்
குதூகலம். காலத்தின் தீராத ஒரு புத்தகத்தை வாசிக்கும் பேரனுபவம்.