தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை எடுப்பது குறித்து கலந்துரையாடுவதற்காக, ஐந்து தமிழ் கட்சிகளும் கொழும்பில் இன்று கூட்டப்பட்ட கூட்டத்தில் பங்கேற்க வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற போது, இன்று ஐந்து கட்சிகளின் கூட்டத்தைக் கூடுவதாக முடிவு எடுக்கப்பட்டது.
எனினும், பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் ஒன்றிணைந்த ஐந்து தமிழ் கட்சிகளும் தீர்மானமொன்றுக்கு வந்துள்ள நிலையில், மீண்டும் ஒரு கலந்துரையாடல் மற்றும் புதிய தீர்மானங்கள் தேவையில்லை என்பதால், இன்று நடைபெறும் கூட்டத்தை புறக்கணிக்க தீர்மானித்ததாக, சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.