கிரிக்கெட்டை வணங்கும் இந்தியாவில் சச்சின், கங்குலி போன்ற வீரர்கள் கடவுளர் போல் போற்றப்படுகின்றனர்.
அந்த வரிசையில் இடம்பிடித்த “நம்ம தல” தோனி. சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவரை வாழ்த்து மழையில் நனைத்து வருகின்றனர். மும்பை. டெல்லி, சென்னை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் வளர்ந்தவர்களே,
இந்திய அணியில் இடம்பிடிக்க முடியும், அதன் கேப்டனாக உயர முடியும் என எழுதப்படாத பல சட்டங்களை ஜார்கண்ட் போன்ற பின்தங்கிய மாநிலத்தில் இருந்து வந்து
தகர்த்தெறிந்தவர் தோனி. எல்லோரையும் போல் சச்சினை பார்த்து வளர்ந்த அவர் பின்னாளில் சச்சினுக்கே கேப்டனானதெல்லாம் சாதாரண விஷயமல்ல.
கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதியன்று வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் சர்வதேசப் போட்டியில் கால் பதித்தார் தோனி.
முதல் கோணல் முற்றும் கோணல் என்பர். அதுபோல் முதல் போட்டியில் டக் அவுட் ஆன தோனி
கடும் முயற்சியால், பின்னாளில் தொட்ட சிகரங்கள் ஏராளம். தன் ஹெலிகாப்டர் ஷாட்களால் அதிரடி பேட்டிங்குக்கு புது இலக்கணம் வகுத்தார்.
2005ல் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின்போது புயல் வேக ஆட்டத்தால் அதிபர் முஷாரப்பையே கவர்ந்தார்.
கிரிக்கெட்டை அதன் இலக்கணம் மாறாமல் ஆடிய சச்சின், டிராவிட் போன்றோரைப் போலன்றி
மடக்கியும், எகிறியும் அடித்து அசுர வேகத்தில் அனாயசமாக ரன் குவிக்கும் வித்தையை பெற்றிருந்த தோனி,
கிரிக்கெட் குறித்த மதிநுட்பத்தை பெற்றிருந்ததால் இந்திய அணி கேப்டனாக்கப்பட்டார்.
2007ல் 20 ஓவர் உலகக்கோப்பையை வசமாக்கினார். தொடர்ந்து 2011ம் ஆண்டில் இந்தியாவுக்கு 50 ஓவர் உலகக் கோப்பையை வாங்கிக் கொடுத்தார்.
அதுபோல் 2013ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி கோப்பைய வென்று தந்தார்.விக்கெட் கீப்பிங்கிலும் டெக்னிக்கில் கிர்மானி அளவுக்கு இல்லாவிட்டாலும் சாதுரியமான ஆட்டத்தால்
829 பேட்ஸ்மேன்களை பெவிலியனுக்கு அனுப்பியுள்ளார். இன்றைய கோலி, பும்ரா, ரெய்னா, புவனேஸ்வர் குமார், ஜடேஜா போன்ற இளம் பட்டாளத்தை உருவாக்கி
சச்சின் இல்லாத இந்திய அணிக்கு புதிய பரிமாணத்தைத் தந்தவர்.இதுநாள் வரை வேகப்பந்துவீச்சுக்கு பெரிதாக பேசப்படாத இந்திய அணி தற்போது உலகின் பலம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களை கொண்ட அணியாகவும்,
சிறந்து பீ்ல்டிங் அணியாகவும் விளங்குவதற்கு தோனி ஊன்றிய “பிட்னஸ்” எனும் விதையே முக்கிய காரணம்.
சர்வதேச அளவில் பிரபலமாக விளங்கினாலும் தமிழகத்தை பொருத்தவரை சென்னை சூப்பர் கிங். நம்ம தல தோனிக்கு ஒகு விசில் போடுவோமா ?