மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு பிரதேச செயலகப் பிரிவுகளில் 83 குடும்பங்களைச் சேர்ந்த 297 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட செயலாளர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

புதிய காத்தான்குடி பதுரிய்யா பாடசாலையில் இடம்பெயர்ந்த 46 குடும்பங்களைச் சேர்ந்த 150 பேர் தங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட பலர் உறவினர்கள் வீடுகளில் தங்கியிருக்கின்றர் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதில் கிராம உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கலாவெவ நீர்த்தேக்க வான்கதவுகள் 2 அடி அகலத்தில் திறக்கப்பட்டிருப்பதாக கலாவெவ நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.எச்.ஆர்.பண்டார தெரிவித்தார். இந்த இரண்டு வான்கதவுகளில் இருந்தும் வினாடிக்கு 8500 கன அடி நீர் வெளியேற்றப்படுகின்றது.

இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்தும் பெய்துவரும் பலத்த அடைமழை காரணமாக மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

மாவட்டத்தின் ஆலையடிவேம்பு மற்றும் உகன பிரதேச செயலகப்பிரிவுகளில் தமது குடியிருப்புக்களில் இருந்து வெளியேறிய பொது மக்களே இவ்வாறு இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் நாவற்காடு மற்றும் அக்கரைப்பற்று உள்ளிட்ட பல பிரதேசங்கள் வெள்ளத்தினால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் இங்கு வாழ்ந்து வந்த மக்களின் குடியிருப்புக்களில் வெள்ளம் புகுந்துள்ளது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமைத்த உணவினை வழங்க ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் மற்றும் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் எம்.ஏ.எம். றியாஸ் உள்ளிட்டவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் சூரியகட்டக்காடு குளம் மற்றும் சமன்குளங்களில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால், 15 குடும்பங்கள் அந்த இடங்களில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் வன்னேரிக்குளம் மற்றும் பிரமந்தனாறு குளம் ஆகியவற்றில் நீர் வழிந்தோடுகின்றது. மலைப்பிரதேசத்தில் மக்கள் மண்சரிவு ஏற்படக்கூடிய அறிகுறிகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பதுளை, இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இராஜாங்கனை, தெதுறு ஓயா நீர்த்தேக்கங்களில் நீர் வழிந்தோடுகின்றது. உல்ஹிட்டிய நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

அத்தனகலு ஓயா, துனமலே குளம் நிரம்பி வழிந்தோடுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு மாவட்ட செயலாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதுடன் தேவையான நிதியும் வழங்கப்பட்டுள்ளது.

இவை தொடர்பான விபரங்களை 117 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். இதேவேளை கண்டி வலப்பனை பிரதான வீதியில் மலபத்தாவ என்ற இடத்தில் இன்று அதிகாலை மண்மேடு சரிந்து விழுந்தமையால் ஒரே குடும்பந்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டெடுக்கும் நடவடிக்கைக்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பும் கோரப்பட்டுள்ளது. இதற்காக 3 வது சிங்ஹ ரெஜிமென்ட் படைப்பிரிவைச் சேர்ந்த 50 பேர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here