மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம், வேதியியல் ஆகிய துறைகளில் மகத்தான
சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், 2019-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில்
கடந்த அக்டோபர் 11-ம் தேதி அறிவிக்கப்பட்டது.
அதில் எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது அலி (43) அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
எத்தியோப்பியாவின் நான்காவது பிரதமராக கடந்த 2-4-2018 அன்று பொறுப்பேற்ற
அபி அஹமது அலி அண்டைநாடான எரிட்ரேயா அதிபருடன் மேற்கொண்ட சமரச நடவடிக்கைகளாலும் எத்தியோப்பியா நாட்டு மக்களின்
வாழ்வாதரத்தை வளப்படுத்தவும், ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கவும் ஆற்றிய அரும்பணிக்காக அவருக்கு நோபல் விருது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 2019-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் விருது வழங்கும் நிகழ்ச்சி நார்வே தலைநகர்
ஒஸ்லோ-வில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது அலி அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுக்கொண்டார்.