கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட்வர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதைக் கட்டுப்படுத்த மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன. பலர் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் நிலை உருவாகியுள்ளது.
திரையுலகில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருப்பதால் நடிகர்கள் வீட்டில் முடங்கியுள்ளனர்.
மேலும் திரைத்துறையின் 23 சங்கங்களை உள்ளடக்கிய பெஃப்சி சம்மேளனத்தில் தினக்கூலிகளாக பணியாற்றும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள் உதவ வேண்டும் என்று அச்சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை வைத்திருந்தார்.
அதை ஏற்று சினிமா தொழிலாளர்களுக்காக ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்த ரஜினிகாந்த், தற்போது துணை நடிகர்கள், உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட நலிந்த கலைஞர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட 24 டன் அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவியுள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியிருக்கும் இயக்குநர்கள் சங்கம், “குறிப்பறிந்து கேட்காமலே உங்கள் கலைக்குடும்ப சகோதர்களுக்கு வாரி வழங்கும் தங்கள் கொடையுள்ளத்தை வாழ்த்த வார்த்தைகள் இல்லை. போற்றுகிறோம்” என்று தெரிவித்துள்ளது.