இலங்கையினால் கோரப்பட்ட சுமார் ஒரு மில்லியன் எஸ்ட்ரா செனகா தடுப்பூசிகள் உரிய காலத்திற்கு வழங்க முடியாமற் போகும் என்று இந்தியாவின் சீரம் நிறுவனம் இலங்கையின் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்திடம் தெரியப்படுத்தியுள்ளது.
சீரம் நிறுவனத்தினால் கடந்த 03ஆம் திகதி அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அவசரக் கடிதத்தில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி சீ.பூனாவெல்லவின் கையெழுத்துடன் இந்த கடிதமானது, மரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவரான டாக்டர் பிரசன்ன குணசேனவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்துவரும் சீரம் நிறுவனத்தில் அண்மையில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டிருந்தது.
இதன்பின்னர் எழுந்த நெருக்கடி நிலையே மேற்படி தடுப்பூசி அனுப்பிவைப்பதில் சிக்கலை ஏற்படுத்தியிருப்பதாக கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சீரம் நிறுவனத்திடமிருந்து எஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் 1.5 மில்லியன் டொலர்களை செலுத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் மாதத்தில் இந்த தடுப்பூசிகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்ட போதிலும் மேலும் தாமதமடையலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.