யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கும் தென் இந்தியாவுக்கும் இடையேயான வழக்கமான பயணிகள் விமான சேவை- நவம்பர் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கைக்கான இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நேற்றுக் காலை ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது. இதையடுத்து, சென்னையில் இருந்து வந்த முதல் விமானம் இங்கு தரையிறங்கியது.
இந்த விமானத்தில் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை என்பதுடன் விமான ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் உள்பட 16 பேர் மட்டுமே பயணித்தனர். அவர்களுக்கு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குடிவரவு குடி அகல்வு திணைக்கள அதிகாரிகளால் விசா வழங்கப்பட்டது.
இந்நிலையில் முதற்கட்டமாக, மதுரை, கோவை, திருச்சி, சென்னை, மும்பை, திருவனந்தபுரம் நகரங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானம் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கும் சென்னை விமான நிலையத்துக்கும் இடையிலான பயணிகள் விமான சேவை, நவம்பர் 1ஆம் திகதி இருந்தே ஆரம்பமாகும் என்று இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.