போரின் முடிவில் சரணடைந்த புலிகளின் தளபதி கேணல் ரமேஷ் உள்ளிட்ட பலர் பின்னர் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க.
அமைச்சர் பதவிகளை ராஜினாமாச் செய்த 15 பேர் அணியின் ஊடக சந்திப்பொன்றில் அவர் இந்தக் கருத்துக்களை வௌியிட்டுள்ள நிலையில் அது தொடர்பான வீடியோ காணொளியுடன் செய்தியொன்றை கொழும்பு இணையத்தளம் ஒன்று வௌியிட்டுள்ளது.
அதில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளதாவது, “விடுதலைப் புலிகளின் கேணல் ரமேஷ் என் நெருங்கிய நண்பர். அவர் ராணுவத்தினரிடம் சரணடைய பத்துநிமிடம் முன்னதாக எனக்கு குறுஞ்செய்தியொன்றை அனுப்பியிருந்தார். பின்னர் அவர் கொல்லப்பட்டிருந்தார். இதே போன்று ஏராளம் பேர் சரணடைந்தனர். பலர் கொல்லப்பட்டனர். இந்த வரலாறு உங்களுக்கும் தெரியும். எனக்கும் தெரியும். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ராணுவத் தளபதியும் இந்நாள் அமைச்சருமான சரத் பொன்சேகாவை சிக்கலில் மாட்டி விடும் நோக்கிலேயே அவர் இந்தக் கருத்துக்களை வௌியிட்டுள்ளதாக கொழும்பு நியூஸ்டுடே செய்திச் சேவை தெரிவித்துள்ளது.இதற்கிடையே முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக போர்க்குற்றங்கள் தொடர்பான சில விடயங்களை கசிய விட பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தரப்பும் தயாராகி வருவதாகவும் நம்பகமான தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என தெரிவித்திருந்தார்.