யுத்தம் முடிவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் விமானம் மூலம் கொழும்பில் தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகள் திட்டம் தீட்டியிருந்தனர் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஐ.நா.பேரவையின் கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி, நியூயோர்க்கில் உள்ள இலங்கையர்களை சந்தித்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்தம் இடம்பெற்ற வேளையில்,உயர்மட்ட அதிகாரிகள் அனைவரும் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டார்கள்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க ஆகியோர் இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற வேளையில் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர்.
போரின் முக்கிய கட்டத்தில் இவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறியது ஏன் என்று யாருக்கும் தெரியாது, எனக்கு மாத்திரம் தான் அது தெரியும்.
அவ்வேளையில் விடுதலைப்புலிகள் கொழும்பை விமான உதவியுடன் தாக்குவதற்கு திட்டம் தீட்டியிருந்தார்கள்.அதனால் உயர்மட்ட தலைவர்கள் அனைவரும் தலைமறைவாகினர்.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தான் இறுதி யுத்தத்தின் இறுதி இரண்டு வாரங்களையும் பதில் பாதுகாப்பமைச்சர் என்ற ரீதியில் நான் அதனை கையிலெடுத்து முன்னெடுத்து சென்றேன்.
நான் முன்னின்று நடத்திய இறுதி யுத்தத்தின் இறுதி இரண்டு வாரங்களில் போர்க்களத்தில் என்ன நடந்தது என்பது எனக்கு மாத்திரமே தெரியும்.
என்னுடைய தலைமையின் கீழ் நடந்த அந்த இறுதிப்போரில் படையினர் எந்த போர்க்குற்றங்களையும் செய்யவில்லை.
அவர்கள் போர் விதிமுறைகளை மீறாமல் அந்த போரை நடத்தி வெற்றியை பெற்றுத்தந்தார்கள்.என்றும் தெரிவித்தார்.