முல்லைத்தீவு- பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள், தொல்பொருள் சிதைவுகள் இருப்பதாக, குறித்த பகுதிக்கு சென்ற பௌத்த மதகுருமார்களிடம் விகாரை தரப்பு காண்பித்ததனால் புதிய சர்ச்சை தோன்றியுள்ளது.

பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தை அபகரித்த பௌத்த மதகுரு ஒருவர், அங்கு விகாரை அமைத்து குடியிருந்தார். அதையடுத்து பல சர்ச்சைகள் ஏற்பட்டன. விகாரையில் குடிகொண்டிருந்த விகாராதிபதி மரணமடைந்ததை தொடர்ந்து, அவரது உடலை நீதிமன்ற அனுமதியையும் மீறி ஆலய கேணிக்கு அருகில் தகனம் செய்தமையினால் அந்த பகுதியில் பாரிய பிரச்சினைகள் உருவாகி அதனை தொடர்ந்து பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் தொடரப்பட்ட நிலையில் பாரிய சர்ச்சை உருவாகியுள்ளது.

இந்நிலையில் நேற்று கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த பௌத்த மதகுருக்கள் 30 பேர் அளவில் பேருந்து ஒன்றில் குறித்த நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த விகாரையை பார்வையிடுவதற்காக வருகை தந்திருந்தனர்.

நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு எதிர்ப்பக்கமாக அமைந்திருக்கின்ற இராணுவ முகாமில் தொல்பொருள் சின்னங்கள் சில ஒரு கண்காட்சி கூடமாக அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த தொல்பொருள் சிதைவுகள் வைக்கப்பட்டிருக்கின்ற பகுதியின் ஒரு பகுதி இராணுவத்தினரின் தங்குமிடமாகவும் காணப்படுகின்றது. அதேபோன்று குறித்த ஆலய வளாகத்தை சுற்றி காணப்படுகின்ற பிரதேசத்திற்குள் தொல்பொருள் திணைக்களம் அதனுடைய அடையாள கற்களை நாட்டி உள்ளதோடு ஒரு சில தொல்பொருள் சிதைவுகளும் குறித்த காட்டுப் பகுதிகளில் தற்போது காணப்படுகின்றன.

இவற்றை பார்வையிடட பின்னர், கொழும்பில் இருந்து வருகை தந்த பௌத்த மதகுருமார்கள் இது தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான இடம் எனவும் அரசாங்கம் இதனை பாதுகாக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் நீராவியடி பிள்ளையார் ஆலய ஆலய நிர்வாகத்தை தொடர்பு கொண்டபோது, அவர்கள் இவ்வாறு எந்த ஒரு சிதைவுகளும் அல்லது எந்த ஒரு பொருட்களுமே எமது ஆலய வளாகத்தில் இதுவரை காலமும் இருக்கவில்லை எனவும் அது திட்டமிட்டு கொண்டு வரப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கின்றார்கள்.

இதனால் நீராவியடி பிள்ளையார் ஆலய வளாக விவகாரத்தில் மீண்டும் ஒரு புதிய சர்ச்சையை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here