ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க உடனடியாக விலகி சஜித் பிரேமதாசவுக்கு வழிவிட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

சஜித் பிரேமதாச ஆதரவு தரப்பினருடனான முக்கிய சந்திப்பு நேற்றுக் காலை இடம்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி உடனடியாக மறுசீரமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர் கட்சித் தலைவர், பொதுச்செயலாளர் உட்பட உயர்பீடத்தில் முழு அளவில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது கட்சித் தலைமைப்பீடம் உட்பட ஸ்ரீகொத்தா தலைமையகத்திடமிருந்து போதுமான ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை. ரணிலின் தலைமைத்துவத்தின் மீது கட்சியின் பெரும்பான்மையினர் நம்பிக்கை இழந்துவிட்டனர்.

இனி அவர் பதவி விலகுவதே கௌரவமானதாகும். கட்சியை பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டை நாம் கொண்டிருக்கின்றோம். அவர் வழிவிடாவிட்டால் நாம் மாற்று வழியை தேட வேண்டிய நிலை ஏற்படலாம். அன்று எஸ். டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க ஐ.தே.க.விலிருந்து வெளியேறி சுதந்திரக் கட்சியை ஸ்தாபித்து வெற்றிபெற்றார்.

அதேபோன்று மஹிந்த ராஜபக்ஷ சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறி பொதுஜன பெரமுனவை ஸ்தாபித்து இன்று அதில் வெற்றிபெற்றுள்ளார். ஆனால் நாம் அப்படி ஐ.தே.க.வை அழிவை நோக்கிக் கொண்டு செல்ல முற்படமாட்டோம். அக் கட்சியை பாதுகாப்பதே எமது குறிக்கோள்.

தலைமைத்துவம் பிடிவாதப்போக்கில் செயற்பட்டால் தாம் விரும்பாமலேயே மாற்று வழிக்கு செல்லும் நிலை ஏற்படலாம். எல்லோரும் ஒன்றுபட்டு புதிய பாதையில் பயணிக்க முடிவெடுத்தால் அதற்கும் நாம் தயாராகவுள்ளோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here