தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டிஅளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள தகவல்களை பார்வையிட்டு, திருத்தம் செய்வதற்கான காலஅவகாசத்தை இந்திய தேர்தல் ஆணையம் நீட்டித்து உள்ளது. இதில் பெயர், முகவரி திருத்தம் மற்றும் புகைப்படம் மாற்றம் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் தற்போது வரை 1 கோடியே 87 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு விவரங்களை சரி செய்து உள்ளனர்.
சென்னையில் 3 லட்சம் பேர் விண்ணப்பம் மூலமாகவும், 5.78 லட்சம் பேர் மொபைல் ஆப் மூலமாகவும் திருத்தம் செய்து உள்ளனர்.
விக்கிரவாண்டியில் சீமான் பேசியது குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர காங்கிரஸ் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட கலெக்டரான, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அறிக்கை கேட்கப்பட்டு உள்ளது.
அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். ராதாபுரம் தொகுதி தொடர்பான வழக்கு சுப்ரிம் கோர்ட்டில் இருப்பதால் அதுகுறித்து எதுவும் கூற இயலாது. இவ்வாறு அவர் கூறினார்.