தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிகழ்வும்,
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிகழ்வு
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் டெல்லி நீதிமன்றத்தில்
பாலியல் வன்கொடுமை தொடர்பாக விசாரணைக்கு வந்துள்ள வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக, பாதிக்கப்பட்டப் பெண் குற்றம்சாட்டப்பட்டவரின் மீது 2016-ம் ஆண்டு புகார் அளித்தார்.
அந்த வழக்கில் 40 வயது பெண் அளித்துள்ள புகாரில், ‘1981-ம் ஆண்டு தனக்கு நான்கு வயது இருக்கும்
முதன்முதலாக என்னுடைய தாய்வழி மாமாவால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டேன்.
நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது மூன்று முறை கருக்கலைப்பு செய்யப்பட்டேன்.
அதுவரையிலும் நான் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டேன்.
பின்னர், 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் எனக்கு விவாகரத்து ஆனதிலிருந்து தற்போதுவரை அவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிவருகிறேன்.
இதுதொடர்பாக என்னுடைய அம்மாவிடம், என்னுடைய குடும்ப உறுப்பினர்களிடமும் தெரிவித்துவிட்டேன்.
ஆனால், அவர்கள் இது குறித்து உறுதியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக என்னைத் திட்டுகின்றனர்.
2016-ம் ஆண்டு என்னுடைய அம்மா இறந்தபோது அவரைப் பார்க்கச் செல்வதற்கு அனுமதி மறுத்தனர்.
அவரின் விருப்பப்படி நடக்கிறேன் என்று ஒப்புக்கொண்ட பிறகே கடைசியாக தாயின் உடலைப் பார்க்க அனுமதிக்கப்பட்டேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரின் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் டெல்லி நீதிபதிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.