ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நேற்று 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டனர். இவர்களில் ஒரு தரப்பினர் இந்திய கடல் எல்லையையொட்டி கச்சத்தீவு அருகே இன்று அதிகாலை மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது சிறிய ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் இந்த பகுதியில் மீன்பிடிக்க அனுமதியில்லை. உடனே செல்லுங்கள் என மிரட்டினர்.

இதைத்தொடர்ந்து மீனவர்கள் புறப்பட தயாராகி கொண்டிருந்தனர். அந்த சமயம் சில இலங்கை கடற்படை வீரர்கள் மீனவர்களின் படகுகளில் ஏறி தாக்கியதோடு வலை, மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதோடு மீன்களையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து ராமேசுவரம் மீனவர்கள் அவசர அவசரமாக கரை திரும்பினர்.

இதுகுறித்து கரை திரும்பிய ராமேசுவரம் மீனவர்கள் கூறுகையில், கடந்த சில நாட்களாக தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தாமல் இருந்த இலங்கை கடற்படை தற்போது அங்கு அதிபர் தேர்தல் முடிந்ததும் மீண்டும் தமிழக மீனவர்களிடம் அத்துமீறி நடக்கின்றனர். இன்று நடத்திய தாக்குதலில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மீன்பிடி உபகரணங்கள் சேதமடைந்துள்ளன.

இலங்கை கடற்படையின் இதுபோன்ற நடவடிக்கையால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. புதிதாக பொறுப்பேற்றுள்ள இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்கள் மீன்பிடி தொழிலை மேற்கொள்ள சுமூகமான நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here