சுன்னாகம் பொலிஸ்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்று வந்த பல்வேறு துவிச்சக்கர வண்டித் திருட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் சுன்னாகம் பொலிஸ் நிலையப் பெருங்குற்றப் பிரிவில் பணியாற்றும் எழுவர் கொண்ட குழுவினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 15 துவிச்சக்கர வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த-01 ஆம் திகதி பகல் யாழ். இணுவில் தனியார் கல்விநிலையமொன்றின் முன்பாக விடப்பட்டிருந்த மாணவியொருவரின் புதிய துவிச்சக்கர வண்டியொன்று களவாடிச் செல்லப்பட்ட நிலையில் இதுதொடர்பாக சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அத்துல கருணாபால, யாழ். மாவட்டச் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிகால் தல்துவ மற்றும் யாழ்.
மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தசநாயக்க ஆகியோரின் அறிவுறுத்தலின் பிரகாரம் விரைந்து செயற்பட்ட சுன்னாகம் பொலிஸ் நிலையப் பெருங்குற்றப் பிரிவில் பணியாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் உட்பட எழுவர் கொண்ட பொலிஸார் குழுவினர் துவிச்சக்கரவண்டி களவுபோன இடத்திலிருந்து சுமார்-200 மீற்றர் தூரத்தில் சந்தேகநபரொருவரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
அவரிடமிருந்து களவாடப்பட்ட துவிச்சக்கர வண்டியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறித்த துவிச்சக்கர வண்டி மல்லாகம் நீதிமன்றம் ஊடாக துவிச்சக்கர வண்டி உரிமையாளரான மாணவியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.