இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, ஐக்கிய நாடுகள் சபையும் ஐரோப்பிய ஒன்றியமும் வாழ்த்து தெரிவித்துள்ளன.
கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஜனாதிபதித் தேர்தலில்,
ஜனநாயக முறையில் மக்கள் வாக்களித்ததை ஏற்றுக்கொள்வதாகவும் சமாதானம், நல்லிணக்கம், மனித உரிமைகள்,
நிலையான அபிவிருத்தி ஆகிய விடயங்களில் தொடர்ந்தும் இணைந்து கடமையாற்ற எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் வாழ்த்துச் செய்தியில், பல்வேறு துறைகள் தொடர்பில் புதிய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
நடத்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஒருசில வன்முறை சம்பவங்களைத் தவிர,
தேர்தல் அமைதியான முறையில் இடம்பெற்றதாகவும் இலங்கை மக்கள் தமது அடிப்படை உரிமையையும் சுதந்திரத்தையும் தேர்தலில் முழு அளவில் பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், சீனா, ஈரான், வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகள், இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளன.