போதை பொருள் மற்றும் குற்றங்களை தடுப்பது தொடர்பான ஐக்கிய நாடுகளின் சபையின் பணிப்பாளர் Miwa Panholzer Kato மற்றும் அந்த பிரிவின் உலகலாவிய கப்பல் பயணங்களில் இடம்பெறும் குற்றங்களை தடுப்பது குறித்த பிரிவின் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
நீதிமன்றம், மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சில் நேற்று (28) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது சிறைச்சாலைகளுக்குள் போதை பொருள் பாவனை மற்றும் வெளியில் போதை பொருள் விற்பனை ஆகியவற்றை இல்லாதொழிப்பது தொடர்பிலும், இதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது குறித்தும் இந்த சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது.
குறிப்பாக ஐ.நாவின் தலையீட்டுடன் சிறைச்சாலைகளில் காணப்படும் போதை பொருள் பாவனையை ஒழித்து போதை பொருள் பாவனை அற்ற சிறைச்சாலைகளாக மாற்றுவதற்கு தேவையான தொழிநுட்ப உதவிகள் மற்றும் பிற உதவிகளை பெறுவதற்கு தயார் எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதன்போது தெரிவித்துள்ளார்.
இதற்கு ஐ.நாவுடன் இணைந்து செயற்பட எண்ணியுள்ளதாகவும் கைதிகளின் நலன்புரி விடயங்கள் உள்ளிட்ட சகல விடயங்களிலும் எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளை எடுப்பதற்கு தயார் எனவும் அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.
தற்போது சிறைச்சாலைகளில் காணப்படும் வசதிகள் மற்றும் கைதிகளுக்கு பெற்றுக்கொடுக்க கூடிய வசதிகள் போதாமல் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆகவே, கைதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்குவது புதிய அரசாங்கத்தின் கொள்கை எனவும் அதற்காக தான் அர்பணிப்புடன் கடமையாற்றுவதாகவும் அமைச்சர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.