இத்தாலியில் நடப்பது என்ன?

0
486

கொரோனா என்னும் வைரஸ், சீனாவில் தனது கோரத் தாண்டவத்தை முடித்து ஓய்வதற்குள், கடந்த மாதம் பிப்ரவரியில் இத்தாலியை எட்டிப்பார்த்தது. முதலில் ஒரு இத்தாலியர் உயிரைப் பலிவாங்கிய இந்த வைரஸ், அவர் சென்ற அந்த மருத்துவமனையில் இருந்த 18 பேருக்கு பரவியது.

இந்தச் செய்தி வெளிவந்த உடனேயே (பிப். 21) இத்தாலி அரசாங்கம் அந்தக் கிராமத்து (கோதோநா/Codogna) எல்லைகளை மூடியது.

அதைச் சுற்றியுள்ள இடங்களில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடுத்தது. இருப்பினும் மற்றவைக்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. அனைவரும் வழக்கம் போல தங்கள் அலுவலகப் பணிக்குச் சென்று கொண்டிருந்தனர்.

முதல் வார இறுதியில் பாதித்தவர்களின் எண்ணிக்கை சிறிது உயரவே, அரசாங்கம் மீண்டும் ஒரு வாரத்திற்கு பள்ளி விடுமுறையை நீட்டித்தது. மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியும், முதல் இரண்டு மூன்று நாள்கள் மட்டும் சிறிது பதற்றத்தில் இருந்த இத்தாலியர்கள், பின் சகஜ நிலைக்குத் திரும்பினார்.

தமக்கு ஏதும் ஆகாது என்ற மெத்தனத்தில், மீண்டும் வெளியில் செல்லத் தொடங்கினர். அடுத்த சில தினங்களிலிலேயே உயிரிழப்பு அதிகரித்தது. விழித்துக்கொண்டது இத்தாலிய அரசு. மக்கள் நலன் கருதி இது வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தாத அரசு, முதல் முறையாக அதைப் பற்றி சிந்தித்தது.

கம்யூனிஸ சீனா போன்று இரும்புக்கரம் கொண்டு மக்களை அடக்க முடியாத காரணத்தால், அரசாங்கம் விதிமுறைகளாக சிலவற்றை வலியுறுத்தியது. எதிர்ப்பார்த்தது போலவே மக்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு வந்தது.

அதைக் கருத்தில் கொண்டு, வைரஸின் தாக்கம் பரவலாக இருந்த லம்பார்டி (Lombardy) என்ற ஒரு பகுதிக்கு மட்டும் மார்ச் 10-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்க பரிசீலித்தது. முறையான அரசு அறிக்கை வெளிவருவதற்கு முன், பத்திரிகை வாயிலாக செய்தி கசியத் தொடங்கியது.

இது, ஒருசில குழப்பங்களையும் பதற்றத்தையும் அதிகப்படுத்தியது என்பதே உண்மை. இது நடந்தது மார்ச் 8-ம் தேதி. மக்கள் அன்று இரவே தொலைதூர ரயில் பயணத்திற்கு ஆயத்தமாகி, அந்தப் பகுதியை விட்டு கூட்டமாகப் புறப்பட்டனர்.

வேலை நிமித்தமாகப் பல இத்தாலியர்கள், தெற்கிலிருந்து வடக்கில் குடிப்பெயர்ந்து இங்கு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் ஊருக்குக் கிளம்பினார்கள்.

இந்த வைரஸை ஒரு பகுதிக்குள் கட்டுப்படுத்தி வைக்க முயன்ற அரசுக்கு, இது பெரும் சவாலாக மாறியது. கண்மூடி கண் திறப்பதற்குள் மக்கள் இத்தாலியின் பல்வேறு மாகாணத்திற்கு பிரிந்து சென்றுவிட்டார்கள்.

இதைக் கருத்தில் கொண்டே உடனடியாக இத்தாலி அரசு, நாடு முழுவதும் ஊரடங்கைக் கொண்டுவந்தது. பலசரக்குக் கடைகளும் மருந்தகங்களும் மட்டுமே திறந்துவைக்க அனுமதிக்கப்பட்டது.

இந்த இரண்டு வார இடைவெளியில், கிருமி பல மடங்காகப் பரவி பலரையும் கொன்று குவித்தது என்பதே வேதனையிலும் வேதனை. குறிப்பாக, இத்தாலியின் வட மாகாணத்தில் உள்ள பெர்காமோ (Bergamo) என்ற இடத்தில் மக்கள் கொத்துக்கொத்தாக இந்த நோய்க்குப் பலியானார்கள்.

இங்கிருந்த மருத்துவமனைகள் நிரம்பத் தொடங்கின. ஐரோப்பாவின் மூன்றாவது பெரிய வல்லரசான இத்தாலியில், மக்களுக்குத் தேவையான மருத்துவப் படுக்கைகளும், வசதிகளும் தட்டுப்பாடானது என்றால் நம்புவீர்களா? ஆம், அதுதான் உண்மை. மருத்துவ தட்டுப்பாட்டால் மருத்துவர்கள் யாருக்கு சிகிச்சை அளிப்பது என்று தேர்வு செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். வேதனை.

Foto Claudio Furlan – LaPresse 10 Marzo 2020 Brescia (Italia) News Tende e strutture di emergenza degli Spedali Civili di Brescia per l emergenza coronavirus Photo Claudio Furlan/Lapresse 10 March 2020 Brescia (Italy) Tents and emergency structures of the Civil Hospitals of Brescia for the coronavirus emergency

இதை உணர்ந்த அரசு, துரிதமாகக் களமிறங்கி ராணுவம் மற்றும் அனைத்து தரப்பின் உதவி கொண்டு உடனடி மருத்துவமைகளை கட்டத் தொடங்கியது.

இறந்தவர்களில் பெரும்பாலானோர் 70-80 வயதைத் தாண்டியவர்கள். இவர்களில் பலரின் வாழ்க்கை தொடங்கியதோ இரண்டாம் உலகப்போரின் கோரமான நாள்களில்தான். பரிதாபமாக அவர்களது இறுதி வாழ்க்கையும் அதே போன்ற ஒரு சூழலில் சிக்கித் தவித்தது.

இப்படி மூன்றாவது வாரமும் எந்த முன்னேற்றமும் இன்றி மக்கள் இறப்பு எண்ணிக்கை உயர்ந்தவாறே இருந்தது. அரசாங்கமும் பலவாறு மக்களை கேட்டுக்கொண்டபோதும், மக்கள் சிறிது அலட்சியமாக இருந்தனர் என்றே கூறலாம்.

இறுதியாக, இறந்தவர்களின் எண்ணிக்கை சீனாவையும் மிஞ்சி உயர்ந்தது. இறந்தவர்களின் சடலங்களை புதைக்கக்கூட முடியா வண்ணம் அந்தக் கிராமமே ஸ்தம்பித்தது.

பிறகுதான் இத்தாலி அரசு மிகவும் கடுமையான சட்டத்தைக் கொண்டுவந்தது. பொது இடங்களில் இருவருக்கு மேல் ஒன்றாக இருந்தால் உங்களுக்கு 5000 யூரோ வரை அபராதம் என்று அறிவித்தது. மிலன் போன்ற பெரு நகரங்களில் மிலிட்டரி கொண்டு குவித்தது.

கடந்த சில தினங்களாக இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. வீதிகளில் மக்களின் எண்ணிக்கை பெருவாரியாகக் குறைந்துள்ளது. மக்கள் பலர் தங்களது வீட்டில் இருந்தபடியே பாட்டுப்பாடி, மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கு தங்களது நன்றியைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

மூன்றாம் உலக நாடுகளைவிட பன்மடங்கு சுகாதாரத்திலும் மருத்துவத்திலும் வளர்ந்து விளங்கும் இத்தாலியில், இந்த நிலை வரக் காரணம் எது? இதை அலசி ஆராய வேண்டியது மிகவும் கட்டாயம்.

இத்தாலியின் வட மாகாணத்தில் கணிசமான தொகையில் சீனர்கள் வாழ்ந்துவருகிறார்கள். சீன புதுவருடம் காரணமாக இவர்கள் ஜனவரி இறுதியில் சீனா சென்று வந்ததும் இத்தாலிக்குள் இந்தக் கிருமி வர ஒரு காரணமாக இருக்கலாம்.

எனவே, இந்தப் பாதிப்பு வரும் முன்னே விமான நிலையத்திலும் எல்லைகளிலும் இதைக் கண்டறிய ஆவண செய்திருந்ததால் இன்று இந்த நிலைமை வந்திருக்காது என்பதே அனைவரது ஒருமித்த கருத்தாக இருக்கிறது.

இதற்கிடையில், நம் தேசத்திலிருந்து இங்கு படிக்க வந்திருந்த மாணவர்கள் பலர் பீதிக்குள்ளாகி உடனடியாக இந்தியா செல்ல எத்தனித்தார்கள். ஆனால், இந்திய அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் பல விமான நிறுவனங்களும் இந்தியாவிற்கு தனது சேவையை ரத்துசெய்தது. மேலும், ஏர் இந்திய நிறுவனமும் இங்கிருக்கும் இந்தியர்களிடமும் கொரோனா பாதிப்பு இல்லை என்ற மருத்துவச் சான்றிதழ்களைக் கோரியது.

இத்தாலி இருக்கும் சூழ்நிலையில், இங்கிருக்கும் நோயாளிகளுக்கே சோதனை செய்ய போராடிக்கொண்டிருந்த மருத்துவர்களுக்கு மற்றவர்களைச் சோதித்து சான்றிதழ்கள் வழங்குவது என்பது சாத்தியமில்லை.

எனவே, இது மேலும் குழப்பத்தை அதிகப்படுத்தியது. மாணவர்கள் விமான நிலையங்களிலேயே கூக்குரலிட, அந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. இது, இந்தியாவில் பெரும் கேள்விகளாக உருவெடுத்து, இந்திய அரசாங்கம் 400-க்கும் மேற்பட்ட மாணவர்களை இந்தியாவிற்கு அழைத்துச்சென்றது.

இந்திய மருத்துவக் குழுமமும் இங்கு வந்திருந்து பல மாணவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து, அவர்களது பயத்தைப் போக்கியது.

இன்று வரையிலும் சமூக வலைதளங்களில் பலர் தங்களை இந்தியா திரும்ப கூட்டிச்செல்ல வேண்டும் என்று கோரியவண்ணம் உள்ளனர்.

அவர்களுக்கு எனது அறிவுரை என்னவென்றால், தயைகூர்ந்து உங்கள் இல்லங்களிலேயே இருங்கள். இன்று இருக்கும் சூழ்நிலையில் நீங்கள் வெளியில் சென்றால், உங்களுக்கு இந்தக் கிருமியால் பாதிப்பு வர வாய்ப்புள்ளது. அது மட்டுமல்ல, நீங்கள் இந்தியா சென்று அங்குள்ள உங்களது பெற்றோர், உற்றார், உறவினர் என்று பலருக்கும் வைரஸ் பரவ நீங்களே ஒரு காரணமாக இருக்கலாமா?

இதையே தான் இன்று தமிழகத்தில் இருந்து வரும் செய்திகளும் உறுதி செய்கின்றன.

எனவே சிந்தியுங்கள். இன்றைக்கு உலகிலேயே பாதுகாப்பான ஒரு இடம் உண்டென்றால், அது இன்று நீங்கள் இருக்கும் இல்லமே.

கடந்த நான்கு வாரங்களாக விலைவாசி போன்று ஒவ்வொரு நாளும் ஏறிக்கொண்டிருந்த இறப்பின் எண்ணிக்கை, இரு தினங்களுக்கு முன் 24 மணி நேரத்தில் 800 (793) இறப்புகளைக் கண்டது. மளமள வென்று ஏறும் இந்த எண்ணிக்கையைக் கட்டுக்குள் கொண்டு வர யாரும் இல்லையா என்று ஏங்கித் தவித்துக் கொண்டிருந்த மக்களுக்கு, பெரும் ஆறுதலாக வந்தது இன்றைய செய்தி.

ஆம், கடந்த இரு தினங்களாக கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மார்ச் துவக்கத்திலிருந்து அரசு செய்த முயற்சிகளுக்கு இப்போதுதான் விடைகள் கிடைக்கத் தொடங்கியுள்ளன என்று கூறப்படுகின்றது.

நேற்றைய கணக்குபடி 601 இறப்புகளே பதிவாகி உள்ளன. உண்மையில் இது அதிகமான எண்ணிக்கையே, இருப்பினும் இரு தினங்களுக்கு முன் இருந்ததைவிட கிட்டத்தட்ட 200 உயிர் இழப்புகள் குறைந்துள்ளது. இதை சாதித்த இத்தாலிய மருத்துவர்களை முதலில் பாராட்டுவோம்.

மேலும், கியூபா, சீனா போன்ற நாடுகளிலிருந்து மருத்துவ உதவிகள் மட்டுமின்றி பல மருத்துவர்கள் குழுமம் குழுமமாக இத்தாலி மருத்துவர்களுக்கு உதவ வந்த வண்ணம் உள்ளனர். இவை அனைத்தையும் காணும்போது, இத்தாலி கொரோனா அரக்கனின் பிடியிலிருந்து மீள்வது வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.

வளர்ந்த நாடான இத்தாலி, எவ்வாறு இந்த அளவிற்கு இறப்பைச் சந்தித்தது என்று அனைவருக்கும் வியப்பே. இதற்கு முக்கியக் காரணம், இந்த பாதிப்பு ஒரு குறிப்பிட்ட நகரத்தில் மட்டும் பெரும் அளவில் இருந்ததாலும், பெரும்பாலானவர்கள் 80 வயதைத் தாண்டிய முதியவர்கள் என்பதாலும்தான். இந்நகரத்தில் இருந்த அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகள் நிரம்பினர். வெண்டிலேட்டர் சாதனங்களின் கையிருப்பைவிட, பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம்.

இதன்பொருட்டே இங்குள்ள மருத்துவர்களும் வயதானவர்களை விட இளையவர்களுக்கும் குணமடையும் கூறு அதிகம் உள்ளவர்களுக்குமே முன்னுரிமையளித்து சிகிச்சை அளிக்கும் இழிநிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்த பற்றாக் குறையைப் போக்க இத்தாலியின் பெருமைவாய்ந்த கார் தயாரிக்கும் பியட் (FIAT) மற்றும் பெராரி (FERRARI) நிறுவனமும் இப்போது வெண்டிலேட்டர் தயாரிப்பில் இத்தாலிக்கு உதவ முன்வந்துள்ளது.

விரைவிலேயே இது செயல்வடிவம் பெற்று வெண்டிலேட்டர் பற்றாக்குறை தீர வேண்டும். இளையவர் முதியவர் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் மருத்துவம் கிடைக்க பெற வேண்டும்.

இன்னும் எத்தனை தினங்கள்தான் இத்தாலி மக்களும் வீட்டினுள் அடைந்துகிடக்க வேண்டுமோ என்ற கவலை இனி விரைவில் அகலப்போகிறது.

இத்தாலியர்களுடன் சேர்ந்து, உங்கள் வீட்டிலிருந்தபடியே கைதட்டி, பாட்டுப்பாடி மருத்துவர்களையும் நமக்கு உதவும் அனைத்து மக்களையும் வாழ்த்தியவண்ணம் இருங்கள்.

இவை அனைத்திலும் ஒரு நன்மை யாதெனில், மனித நடமாட்டம் குறைந்துள்ள இந்தத் தருணத்தில், இயற்கை வளங்களும் விலங்குகளும், மீன்களும் தங்கள் வாழ்க்கையை விரும்பி வாழ்ந்துகொண்டிருக்கின்றன. இதற்கு, வெனிஸ் போன்ற சுற்றுலாத் தளங்களே ஆகச் சிறந்த சான்று.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here